பரதவர் இளஞ்சேட்சென்னி

 நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி  

இவர் முற்கால சோழர் ஆவார்

கரிகால பெருவளத்தான் தந்தையும் ஆவார்

புறநானூறு 10


வழிபடுவோரை வல் அறிதீயே;
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே;

நீ மெய் கண்ட தீமை காணின்;
ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே

அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப!

செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங்கானல் நெடியோய்!
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!
  • திணையும் துறையும் அவை.
  • சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை 
  • ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

விளக்கம்

நெய்தலங்கானல் நெடியோய்
உன்னை வாழ்த்தி வேண்டுகிறேன்.

வழிபடுவோர் உன்னை எதற்காக வழிபடுகின்றனர் 
என்பதை உடனே தெரிந்துகொள்.

பிறன்மீது பழி கூறுபவர்களின் சொல்லை நம்பாதே.

நீ ஒருவனிடம் உண்மையாகவே தீமையைக் கண்டால் 
ஒத்திட்டு ஆராய்ந்து தக்க தண்டனை வழங்கு.

அவர் தன் தவற்றை உணர்ந்து 
உன் காலடியில் வணங்கி நின்றால் 
பண்டைய தண்டனையைக் குறை.

மகளிர் அமிழ்தம் போலச் சமைத்து, 
வந்தவர்க்கெல்லாம் வழங்கும் 
குற்றமற்ற வாழ்க்கையை உடையவர்கள் மகளிர். 

அவர்கள் தழுவுதல் அன்றி, 
போரிடும் மள்ளர் யாரும் தழுவ முடியாத 
கல்மலை போன்ற மார்பினை உடையவன் நீ.

செய்துவிட்டு வருந்தாத நற்செயல்களைப் புரிபவன் நீ.

அதனால் உன் புகழ் விளங்குகிறது.
நெய்தலங்கானல் நிலத்தெய்வம் (நெடியோன்) நீ.

உன்னை நாடி வந்திருக்கிறேன்.
பலவாகப் பாராட்டிப் புகழ்கிறேன்.
பரிசில் வழங்க வேண்டும் என்பது சொல்லெச்சம்.
 
 

நெய்தலங்கானல் 

நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடம் 

கானல் என்பது கடற்கரை பகுதி

அது புகார் நகர பகுதி

நெய்தலங்கானல் என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவதாலும் 

 புறநானூறு 66

 நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!

 

விளக்கம் 

காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய பரதவர்களின் வழித்தோன்றியவனே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே!

நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி யின் மகனான கரிகாலனை

கடலில் காற்றை அடக்கி ஆண்டு நாவாய் ஓட்டும் பரதவர் வழி மரபில் வந்தவனே என்று கூறுவதாலும்

 நெய்தலங்கானல் என்பது புகார் நகர பகுதியை சேர்ந்தது என்பதாலும்

இவர் புகார் நகர பரதவர் என்பது உறுதியாக கூற முடியும் 

 

புறநானூறு 370

 

வள்ளியோர்க் காணாது உய்திறன் உள்ளி,
நாரும் போழும் செய்தூண் பெறாஅது
பசிதினத் திரங்கிய இரும்பேர் ஒக்கற்கு
ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ
வேருழந்து உலறி மருங்குசெத்து ஒழியவந்து 5

அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்
உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்
பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீளிடை
வரிமரல் திரங்கிய கானம் பிற்படப்              10

பழுமரம் உள்ளிய பறவை போல
ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்
துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப
விளைந்த செழுங்குரல் அரிந்துகால் குவித்துப்
படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி            15

எருதுகளி றாக வாள்மடல் ஓச்சி
அதரி திரித்த ஆளுகு கடாவின்
அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
வெந்திறல் வியன்களம் பொலிகஎன்று ஏத்தி
இருப்புமுகம் செறித்த ஏந்தெழில் மருப்பின்  20

வரைமருள் முகவைக்கு வந்தனென் பெரும,
வடிநவில் எஃகம் பாய்ந்தெனக் கிடந்த
தொடியுடைத் தடக்கை ஓச்சி வெருவார்
இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி
அழுகுரற் பேய்மகள் அயரக் கழுகொடு                  25

செஞ்செவி எருவை திரிதரும்
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!

 

விளக்கம்

 வள்ளன்மை உடையவரைக் காணாததால், பிழைக்கும் வழியை எண்ணி, பனை நாரையும் குருத்தையும் கையில் வைத்துக் கொண்டு, உணவு பெறாது, பசியால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார்க்கு நிறைய உணவு பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு, நாற்றிசையும் தேடி, உடலில் வியர்வை ஒழுக வருந்தி, வயிறு வாடுமாறு வறண்ட நிலங்களைக் கடந்து வந்த வழியில், கோட்டானின் துடியொலி போன்ற கடிய குரலோசை, உழுஞ்சில் மரத்தின் கிளைகளிலிருந்த பெண்பருந்தை அழைக்கும் ஆண்பருந்தின் குரலோடு கலந்து ஒலித்தது. 


அங்கே, மூங்கில் மரங்கள் காய்ந்து கிடந்தன.
 வரிகளையுடைய மரல் பழங்கள் வற்றி வாடிக் கிடந்தன.  அந்த வறண்ட காட்டு வழியில் பழமரத்தைத் தேடிச் செல்லும் பறவைகளைப் போல நான் வந்தேன்.

ஓளி பொருந்திய படைக் கருவிகள், பெருமழையில் விழும் கனிகள் போல், பகைவரின் தலைகளை வெட்டி வீழ்த்தியதால், வெள்ளம்போல் ஒலியுடன் குருதி ஒடியது. 

விளைந்த செழுமையான கதிர்களைப் போன்ற பகைவரின் கழுத்தை அறுத்து, காலோடு சேர்த்துக் குவித்து, இறந்த பிணங்களாகிய பல குவியல்கள் அழியும்படி வளைத்து, யானையை எருதாகவும், வாளைத் தார்க்கோலாகவும், கொண்டு செலுத்தி, போரடிக்கும் நெற்களத்தைப் போலப் பகைவர் வீழந்து கிடக்கும் பெரிய போர்க்களத்திலே, 

அகன்ற கண்ணையுடைய தடாரிப் பறையை ஒலித்து, உன்னுடைய வலிமை மிகுந்த, அகன்ற போர்க்களம் விளங்குவதாக எனப் பாராட்டி, இரும்பினால் செய்யப்பட்ட பூண் அணிந்த, உயர்ந்த, அழகிய கொம்புகளையுடைய, மலை போன்ற யானைகளைப் பரிசாகப் பெறலாம் என்று நான் வந்தேன்.  

கூர்மையான கோடரியால் வெட்டப்பட்டுத் துண்டாகிய தொடியணிந்த பெரிய கையைத் தூக்கி, அஞ்சாத வீரர்களின் குடல்கள் தன் காலைச் சுற்றிக்கொள்ள, 

அவற்றை எடுத்துப் பேய்ப்பெண் தன் அழுகுரலால் பாடிக் கூத்தாட, கழுகோடு, சிவந்த காதுகளையுடைய பருந்துகளும் வட்டமிட்டுத் திரியும் அஞ்சத்தக்கப் இடங்களையுடைய போர்க்களத்திற்கு உரிமையுடையவனே!

 புறநானூறு 378

தென்பரதவர் மிடல்சாய
வடவடுகர் வாள்ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்             5

புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்றுஎன்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல மிகப்பல                         10

மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அதுகண்டு
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் 15

அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
.நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்                  20

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு         
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

 

விளக்கம் 

: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி, தென்பகுதி பாண்டியரின் (பரதவரின்) வலிமையை சேர்த்துகொண்டு வடக்கிலிருந்து வந்து குறும்பு செய்த வடுகரின் வாட்படையையும் அழித்தவன். 

தொடுக்கப்பட்ட கண்ணியையும், நன்கு செய்யப்பட்ட வேலை ஏந்திய பெரிய கையையும், விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்துவதற்காக பரிவடிம்பு என்னும் காலணியையும், நல்ல மாலையையும், கள்ளையும் உடைய இளஞ்சேட்சென்னியின் அரண்மனையில் புதிதாக எழுந்த பிறைபோன்ற, வெண்ணிறச் சுண்ணாம்பு பூசப்பட்ட மாடம் இருந்தது.


அவனுடைய அரண்மனை பெரிய, குளிர்ந்த நீர்நிலை போல் குளிர்ச்சி பொருந்தியதாக இருந்தது. அந்த நெடுமனையின் முன்னே நின்று, நுண்ணிய ஓசையையுடைய பெரிய கிணைப் பறை கிழியுமாறு கொட்டி, பகைமேற் செல்லும்போது பாடும் வஞ்சித்துறைப் பாடல்களை மரபு தவறாமல் பாடினேன். 

எம்மைப் போன்ற பரிசிலர்க்குக் கொடுப்பதற்காகச் செய்யப்படாத, மிகப்பல, மேன்மையான, அரிய அணிகலன்களையும் பிற செல்வங்களையும் பெருமளவில் இளஞ்சேட்சென்னி எனக்கும் என் சுற்றத்தாருக்கும் தாங்க முடியாத அளவுக்கு வழங்கினான். 

வறுமையால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார், அவன் வழங்கிய பொருள்களை எல்லாம் கண்டவுடன் அவற்றை ஆர்வத்தோடு எடுத்து, விரல்களில் அணிவனவற்றைக் காதிலும், காதில் அணிவனவற்றைக் விரல்களிலும், இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியவற்றைக் இடையிலும் அணிந்து கொண்டனர். 

 மிகுந்த வலிமையுடைய இராமனுடன் கூடியிருந்த சீதையை, வலிய அரக்கன் கவர்ந்துகொண்டு செல்லும்பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தே விழுந்தவுடன் அந்த நகைகளைக் கண்டெடுத்த, சிவந்த முகமுடைய குரங்குகளின் கூட்டம் அவற்றைத் தாறுமாறாக அணிந்ததைக் கண்டோர் நகைத்து மகிழ்ந்தனர். 

அதுபோல், பெரிய சுற்றத்திற்குத் தலைமை தாங்கி, அவர்களின் வறுமையைக் களையும் நேரத்தில், பல அரிய எண்ணங்களினால் உண்டாகிய துன்பம் நீங்குமாறு,நாங்களும் அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்.















 இதில் தென்பரதவர் மிடல்சாய என்று வருவதை சிலர் இளஞ்சேட்சென்னி தென்பரதவரை போரில் வெற்றி பெற்றான் என்று தவறான விளக்கம் கொடுக்கின்றனர் 

அது முற்றிலும் தவறு 

சாய என்பது பல இடங்களில் சேர்ந்து என்றே வருகிறது 

உதாரணமாக 

மதுரைக்காஞ்சி 55

இரு பெரு வேந்தரொடு வேளிர் சாயப்                55
பொருது, அவரைச் செரு வென்றும்  

விளக்கம் 

இரு பெரு வேந்தரும் வேளிரும்
ஒருங்கிணைந்து (சேர்ந்து) தாக்கிய போரில்
நாற்படை நடத்தி வெற்றி கண்டவன்
  
 
இளஞ்சேட்சென்னி காலத்தில்தான் வடக்கில் இருந்து படையெடுத்து வந்த சந்திரகுப்த மௌரியரை (வடுகரை அவர்கள் தங்களை ஆரியர் என்று அழைத்து கொண்டனர்)சேர சோழ பாண்டியர் கூட்டணி சேர்ந்து போரிட்டு வீழ்த்தினார்கள்
 
வென்வேல், விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைக்கழி அறைவாய் - புறம் 175-6
 
விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த அறை இறந்து அகன்றனர். (பொருள் தேடச் சென்ற தமிழர்) - அகம் 69-1
மௌரிய அரசுகளுக்கு துணை   கோசர் படையுடன் சேர சோழ பாண்டிய நாட்டின் சிற்றரசர்களை தாக்கி அழித்தனர்
இதனால் மூவேந்தரும் இளஞ்சேட்சென்னி தலைமையில் மௌரிய கோசர் கூட்டனியை ஓட ஓட விரட்டி அடித்தனர் 
இதைதான் இந்த பாடல் சொல்கிறது 

தென்பரதவர் (பாண்டியர்) சேர்ந்து வடுகரை வென்றதையே இந்த பாடல் கூறுகிறது 


நன்றி 
கொற்கை கொண்கன்

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்