நெய்தல் நிலத்தவர்

 

பரவர் பரதர் பரதவர் இவை அனைத்தும் ஒரே பொருள் தரும் சொற்களே 

இந்த மூன்று சொற்களுக்கும் மூலம் பரவை என்பதாகும் 

பரவை என்பது பரவி இருக்கும் நீர்பரப்பு குளம் மற்றும் கடல் என்று தமிழ் அகராதி பொருள் கூறுகின்றன 

பரவர் என்ற சொல் தமிழ் நூல்களில் முதன் முதலில் எங்கு கிடைக்கிறது என்றால் 

திருமூலர் எழுதிய திருமந்திரம் என்ற நூலில் இருந்து கிடைக்கிறது 

திருமந்திரம் 

33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை

2031. குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்

வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன

பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து

இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே.

இதன் பொருள் 

சந்திரமண்டலமாகிய குளம் ஒரு முழம் அகலமும் அரைமுழம் (ஒரு சாண்) ஆழமும் உள்ளது. வட்ட வடிவமாக அமைந்த அக்களத்தில் விஷய வாசனைகளாகிய மீன்கள் வாழ்கின்றன. சிவபெருமானாகிய வலைஞன் வலையைக் கொண்டு வீசினான். அவ்வலையில் மீன்கள் அகப்பட்டுக் கொண்டன. யாம் இனிப் பிறவித்துன்பம் நீங்கினோம்.

இங்கு குளத்தில் மீன் பிடிப்பவன் பரவன் என்கின்றது

பரவை என்பது அனைத்து நீர் நிலைகளை குறிக்கும் சொல் என்பது புலனாகின்றது 

கடலூரில் பரவனாறு என்று ஆற்றின் பெயரும் பரவை தொடர்பு படுத்தியே உள்ளது 

சங்க இலக்கியங்களில் பரவை என்பது கடலை குறிக்கும் சொல்லாக உள்ளது என்பதால் 

பரவன்  என்பது கடலன் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும் 

பரதர் 

பரதர் என்பதற்கு நிகண்டுகள் தரும் விளக்கம் கடல் வணிகர் என்பதாகும் 

சிலப்பதிகாரம் பரதர் மிகுதியாக வாழ்ந்த புகார் நகரம் என்கிறது 


பெரும்பாணாற்றுப்படை பகுதி 34

வால் உளைப் புரவியொடு வட வளம் தரூஉம்     320
நாவாய் சூழ்ந்த நளி நீர்ப் படப்பை,
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்,  
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்,   
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்,
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா, 325
ஏழகத் தகரோடு எகினம் கொட்கும் 

 

நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தில் நாவாய்க் கப்பல்கள் சூழ்ந்திருந்தன. 

வெள்ளைக் குதிரைகள் அதில் வந்து இறங்கின.அத்துடன் வடநாட்டுச் செல்வ வளங்களும் வந்திறங்கின.அது நீர் வளம் மிக்க ஊர்.அங்கே மாட மாளிகைகள் ஓங்கிய மணல் பரந்த குறுந்தெருக்கள்.(பரதர் எனப்படுவோர் கப்பல் வாணிகர்)அவர்கள் வாழ்ந்த பெருந்தெருக்களில் வானளாவிய பெரும்பெரும் மாளிகைகள்.அப்பகுதியில் சிலதர் என்னும் வில்லேந்திய அரசுக் காவலர்கள் காவல்பணியை மேற்கொண்டிருந்தனர்.அங்கே வயலை உழுத கறவை காடுகளோ பால்மாடுகளோ இல்லை.மாறாக, சண்டையிடும் செம்மறியாட்டுக் கடாக்களும், சேவல்களும் ஏவிவிடப்பட்டுச் சுழன்று விளையாடிக் கொண்டிருந்தன.அவற்றைப் பரதர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்(அவற்றை நீங்களும் பார்த்து மகிழலாம்.)

என்கின்றன 

மதுரைக்காஞ்சி 

நெய்தல் நில இயல்பு

முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம்315
அரம்போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல
320
விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்
நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்றாங்கு
325

இதன் விளக்கம் 


முழங்கும் கடலலை தரைக்குக் கொண்டுவந்து சேர்த்ததால் ஒளிரும் முத்துக்கள், சங்குகளை அரத்தால் அறுத்துச் செய்த வளையல்கள், பரதர் மக்கள் கடலில் குளித்துக் கொண்டுவந்த முத்து, பவளம் போன்ற பல்வேறு பொருள்கள், உப்பங்கழி வயலில் விளைந்த வெள்ளுப்பு. பரந்து விரிந்த கடலில் திமிலில் சென்று கொண்டுவந்த பெரிய மீன்கள், அவை அடிக்கும் துடிப்பறையின் கண்முகம் போல நறுக்கி வைத்திருக்கும் மீன் துண்டுகள். நாவாய்க் கப்பலை ஓட்டிச் சென்ற வணிகர் கொண்டுவந்த குதிரைகள், (இந்தக் குதிரைகள் பண்டங்களை ஏற்றிச் செல்ல நில வணிகரால் பயன்படுத்தப்பட்டன) இவை போன்ற அனைத்தும் நாள்தோறும் வழிவழியாகச் சிறப்படைந்து கொண்டிருந்த நெய்தல் நிலப் பெருவெளியின் சான்ற வளம். இந்த நெய்தல் நிலப் பகுதி ஒருபக்கம்.


இங்கு பரதர் முத்து, இலங்குவளை (சங்கு) பவளம் இன்னும் பலவற்றை கடலில் மூழ்கி கொண்டு வந்ததாக கூறுகிறது 



பதினெண் கீழ்கணக்கு நூலான 

திணைமொழி ஐம்பது 

தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது

கடல் கொழித்திட்ட கதிர் மணி முத்தம்

படம் அணி அல்குல் பரதர் மகளிர்

தொடலை சேர்த்து ஆடும் துறைவ! என் தோழி

உடலும், உறு நோய் உரைத்து. 45

இதன்  விளக்கம் 


கொழித்திட்ட - செழித்திட்ட


     "பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய பரதவப் பெண்கள் கடல் அலையில் வரும் முத்துக்களை மாலையாகச் சேர்த்து விளையாடுவர். இத்தகைய கடல் துறைவனே! தலைவி நீ மணந்து கொள்ளாமையால் அடையும் துன்பங்களைக் கூறி உடல் வருந்துகிறாள். விரைவில் அவளை மணந்து கொள்வாயாக" என்று தலைவியைப் பற்றி தோழி தலைவனிடம் கூறியது.


அதனால் பரதர் என்பது நெய்தல்நில மக்களை குறிக்கும் சொல் 


பரதவர் 

பரதவர்  என்பது  நெய்தல் நில மக்களை குறிக்கும் சொல் 

அகநானூறு 350

இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,             10


வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்


ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,


கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்


குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,


உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே!   15

இதன் விளக்கம் 

எங்களது பரதவர் கடலில் சுறா மீனுக்காகச் செல்லவில்லை. கடலில் மூழ்கி, வலம்புரிச் சங்கம் எடுக்கின்றனர். திமிலில் கடலுக்குள் சென்று மூழ்கி வலம்புரிச் சங்கம் எடுக்கின்றனர். சங்கு ஊதும் ஒலியுடன் முழ்கி வலம்புரிச் சங்கம் எடுக்கின்றனர். கொற்கையில் வலம்புரிச் சங்கம் எடுக்கின்றனர். அந்தக் கொற்கையில் மணல் குவிந்த கரையில், அதோ பார், எங்கள் சிற்றூர் தெரிகிறது.




புறநானூறு - //திண் திமில் பரதர்// ( உறுதி மிக்க படகையாளும் பரதவர்) பட்டினப்பாலை - //புன் தலை இரும்பரதவர்// (உப்பு நீர் படுவதால் பழுப்பேறிய தலைமுடியைக் கொண்ட வலிமைமிக்க பரதவர்) நுண் வலைப் பரதவர், பெருங்கடல் பரதவர், பழந்திமில் கொன்ற பரதவர், வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர், ’உரைசால் சிறப்பின் அரசுவிழை திருவின் பரதவர் மலிந்த பயங்கொழு மாநகர்” ( மனையறம் படுத்த காதை) ’’அரச குமாரரும் பரவ குமாரரும்” (இந்திர விழா ஊர் எடுத்த காதை) அரசர் முறையோ பரதர் முறையோ” இந்தப் பாடல்கள் பரதவருக்கும் கடலுக்கும் உழைப்பிற்குமான தொடர்பை நமக்குக் காட்டும் சித்திரங்கள் இவை, பரதவர்கள் சங்ககாலத்திலும் அதன் பின்னரும் மீனவர்களாக, முத்துக்குளிப்போர்களாக, வணிகர்களாக, சிற்றரசர்களாக, படைத்தலைவர்களாக, எதிரிப்படைகளில் பங்கு கொண்டவர்காளாக வரலாற்றில் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான் ஆதாரமாக ஏராளமான பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.


பாண்டிய நாட்டிலும் இலங்கையிலும் முத்து குளித்தவர்கள் பரவர் என்ற பரதர்களே 

பரவர் = கடலர் 

பரதர் = கடலர் கடல் வணிகர் 

பரதவர் = கடலர் கடலுக்கு தலைவர்

பட்டினவர் = பட்டினங்களில் வாழ்ந்ததால் பட்டினவர்

 அனைவரும் பரதவரே



பரதவர்களிடம் இருந்து நெய்தல் நில அரசர்கள் உருவானார்கள்

சேர்ப்பன் துறைவன் திரையன் கொண்கன் போன்ற அரசர்கள் உருவானார்கள்

 

 

 நன்றி 

கொற்கை கொண்கன்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்